அது
எப்படி மனைவியும் மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே, நம்
முடைய வீடுகள் 'வாழுமிடம்’ என்பதில் இருந்து வெறுமனே 'வசிப்பிடமாக’ மாறி
விடுகின்றன?
கோடை
விடுமுறைக்குச் சென்றிருக்கும் மகனைப் பார்த்து ஐந்து நாட்கள் இருக்கும்.
வீட்டின் எல்லா இடங்களையும் தனது பல்வேறு சாகசங்களால் நிரப்பித் திரிந்தவன்
இப்போது இல்லாததால், வீடும் மனசும் வெறுமையாக இருந்தன. மனைவியும் மகனும்
ஊரில் இல்லாத இந்த நாட்களில், தாறுமாறாக இருக் கும் என் நூலகத்தை
ஒழுங்குசெய்ய ஆரம்பித்தேன். புத்தக அலமாரிகளின் மேலிருந்து எல்லாப்
புத்தகங் களையும் கீழே இறக்கியபோதுதான், பழைய அகராதி ஒன்றிலிருந்து அந்தக்
கடிதம் தட்டுப்பட்டது.பழையகடிதங்களைப் படிப்பதில் இருக்கும் சுவாரஸ்யம்
அடங்குவதே இல்லை. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அந்தக் கடிதத்தைப்
படித்தேன்.
யார்,
யாருக்கு எழுதிய கடிதம் இது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் கடிதம்
இருந்த அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். 'டாக்டர்’ என்ற அடைமொழியுடன்
கையால் கிறுக்கி இருந்த, புரியாத அந்தப் பெயரின்கீழே 'அரசு மருத்துவமனை,
திருவண்ணாமலை’ என்று ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டு இருந்தது.
முப்பது
வருடங்களாக பழைய புத்தகங்களுக்கு இடையில் ஒளிந்திருந்த அந்தக்கடிதம்,
இன்றைய காலைவேளையில், என் நினைவு அடுக்குகளைத் திறக்க முயற்சித்தது.
பொங்கிவரும் ஞாபகங் களின் கனம் தாளாமல், எனது உள்ளம் நெகிழத் தொடங்கியது.
அவை, அரை டிராயரில் இருந்த ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவனின் சாகச நினைவுகள்.
அந்த வயதில் நாங்கள் எந்த நேரமும் கிசுகிசுத்துக்கொண்டு இருந்த ரகசியங்கள்,
வெயிலும் வியர்வையும் அறியாப் பொழுதுகள், பொய்யான நம்பிக்கைகள்,
அர்த்தமற்ற பயங்கள் என எல்லாமும் ஒரு கலவையாகக் கலந்த பால்ய கால
ஞாபகங்களின் நீரோட்டம் அது. க்ளிஷேவாகத்தான் இருக்கும். இருப்பினும்
இப்படியே ஆரம்பிக்கிறேன்!
முப்பது வருடங்களுக்கு முன் ஒருநாள்...
நானும்
சீனுவும் வெளிச்சம் குறைவான ஓர் அறையில், அந்த டாக்டரின் முன்பு கைக்கட்டி
நின்றிருந்தோம். நாங்கள் படித்து வந்த பள்ளிக் கூடத்தில், காலை நேர
பிரேயர் ஆரம்பிக்க இன் னும் பத்தே நிமிடங்கள் மிச்சம் இருந்தன.என்ன
நினைப்பாரோ அவர்? எங்களைப் பார்த்து, ''சரி... இப்போ போய்ட்டு, நாளைக்குக்
காலை யில வந்துடுங்க'' என்பார். அதன் பின் வியர்த்து விறுவிறுத்து வெளியில்
வரும் நாங்கள், திருவூடல் தெருவிலிருக்கும் டாக்டரின் வீட்டிலிருந்து, எங்
கள் டேனிஷ் மிஷன் பள்ளிக்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் போய்ச் சேர வேண்
டும்.
இப்படி நடப்பது இது ஏழாவது நாள்!
டாக்டரின்
முன்னால் சீனு இப் படி கைக் கட்டிக்கொண்டு நிற்பது நியாயம். நான் எப்படி
இதில் வந்து மாட்டிக்கொண்டேன்? ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே என் வீட்டில்
எனக்கு சைக்கிள் வாங்கித் தந்துவிட்டார்கள். நான்சைக் கிள் வாங்கியதைப்
பார்த்த சீனு, அவன் வீட் டில் கெஞ்சிக்கூத்தாடி அவனும் சைக்கிள்வாங்கி
விட்டான். எப்போதும் நாங்கள் ஒருவரை ஒரு வர் முந்திக்கொண்டுதான் சைக்கிளில்
பள்ளிக் குச் செல்வோம். அதுவும் திருவூடல் தெரு மேட் டில் இருந்து அந்தத்
தெருவின் கீழே இருக்கும் கடலைக் கடை மூலை வரை, ஹேண்டில் பாரில் இருந்து,
கைகளை எடுத்துவிட்டு ஓட்டுவது எங்களின் முக்கியப் பொழுதுப்போக்கு!
நான்
சீனுவுடன் சைக்கிளில் செல்லாத ஒரு காலைவேளையில், திருவூடல் தெரு முனையில்
அந்தச் சம்பவம் நடந்துவிட்டது. சைக்கிள்ஹேண் டில்பாரில் இருந்து கைகளை
எடுத்துவிட்டுப் பறந்துகொண்டிருந்த சீனு, எதிரே வந்த ஒரு குதிரை வண்டியின்
மீதும் ஒரு லேம்ப்ரெட்டார் ஸ்கூட்டர் மீதும் மோதியிருக்கிறான். ஸ்கூட்டர்,
அரசு மருத்துவமனையின் ஒரு டாக்டருக்கு சொந்தமானது. சைக்கிள், குதிரை, புல்
கட்டு, ஸ்கூட்டர், டாக்டர் எனக் கலவையாக ஒருவர் மேல் ஒருவர்
மோதிக்கொண்டதால், யாரால் இந்தவிபத்து என்று யாராலும் உறுதியாகக் கணிக்க
முடியவில்லை. ஆனால், அரை டிராயர் போட்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவன்
விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததால், விபத்துக்கு அவனே காரணமானான்.
இவ்வளவு களேபரத்தில் சீனுவுக்கோ, அவனுடைய சைக்கிளுக்கோ, குதிரைக்கோ சிறு
சிராய்ப்புக்கூட இல்லை. டாக்டருக்குத்தான் ஏகப்பட்ட ரத்தக் காயங்கள்.
டாக்டர், முதல் விஷயமாக தன்னுடைய ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டுபோய் மெக்கானிக்
ஷெட்டில்விட்டார் அடுத்தவேலையாக, ஒரு கையால் சீனுவையும் இன்னொரு கையால்
அவனுடைய பள்ளிக்கூடப் பையையும் பிடித்துக்கொண்டு, அதே தெருவில் இருக்கும்
தன்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டார். சீனு அழுதுகொண்டே அவர் பின்னால்
சென்றிருக்கிறான்.
டாக்டர்,
அவனிடம் அவனுடைய அப்பா பெயர், வீட்டு விலாசம் வாங்கிக்கொண்டு, ஸ்கூட்டரை
சரிசெய்வதற்கு ஆகும் பணத்தை அவனுடைய வீட்டிலிருந்து வாங்கிவந்து
கொடுத்துவிட்டு, ஸ்கூல் பையையும் அவனுடைய சைக்கிளையும் மீட்டுச் செல்லுமாறு
சொல்லி விட்டார். சீனுவின் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் உதை
விழுவதோடு, பள்ளிக்கு சைக் கிளில் செல்லும் சலுகையும் பறிக்கப்பட்டுவிடும்
என்கிற பயம் சீனுவைத் தொற்றிக்கொண்டது.
விடுமுறை முடிந்து ஊரிலிருந்து திரும்பியிருந்த என்னைப் பார்த்து, நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னான் சீனு.
''உன்னோட
சைக்கிள் ரிப்பேர் ஆயிட்டு. அத னால என் சைக்கிளை உனக்குக் கொடுத்துருக்
கேன்னு வீட்ல சொல்லிருக்கேன்டா. இப்ப என்ன பண்றதுனு தெரியலை!'' என்றான்.
''அந்த டாக்டர்கிட்ட நீயே கேட்டுப் பார்க்க வேண்டியதுதானேடா?''
''நாலு நாள் தொடர்ந்து போனேன்டா!''
''என்னதான் சொல்றார் அவர்?''
''எதுவும்
பேச மாட்டார்டா. சும்மா நான் கையைக் கட்டிக்கிட்டு நிப்பேன். என்னையே
பார்த்துட்டே இருப்பார். ரொம்ப நேரம் கழிச்சு, 'போயிட்டு நாளைக்கு வா’னு
சொல்லிட்டு, அவரும் வீட்டைப் பூட்டிக்கிட்டுக் கிளம்பி ருவார்!''
என்னுள்
இருக்கும் ஒரு சமாதானத் தூதுவனை முதலில் அடையாளம் கண்டுகொண்டவன் என்கிற
முறையில், சீனுவுக்கு உதவி செய்வது எனக்குக் கட்டாயமாயிற்று.
மறுநாள்
பிரேயர் 9 மணிக்கு. நாங்கள் 8 மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பினோம்.
திருவூடல் தெருவின் பாதியில் டாக்டர் வீடு இருந்தது. நல்ல அகலமான வீடு.
வீட்டு தாழ் வாரத்தில் சீனுவின் சைக்கிள் ஒரு சங்கிலியால் கிரில் கேட்டோடு
இணைத்துக் கட்டப்பட்டு இருந்தது. அதைப் பரிதாபமாக கண்கலங்கப்
பார்த்துக்கொண்டே காலிங்பெல்லை அழுத்தினான் சீனு. யாரும் வரவில்லை.
எங்களை
உள்ளே வரச் சொல்லி யாரும் கூப் பிடவும் இல்லை. சிறிது நேரம் கழித்து, இவனே
கதவைத் திறந்துகொண்டு முன்னறையில் இருக் கும் டாக்டரின் சின்ன மேஜையின்
முன்புபோய், கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான். 'தினமும் இப்படித்தான்
போலும்’ என்று எண்ணிக்கொண்டேன்.
டாக்டர்,
குனிந்து எதையோ எழுதிக்கொண்டு இருந்தார். நீண்ட நேரம் கழித்து நிமிர்ந்து
எங்க ளைப் பார்த்தவர், 'நீ யார்’ எனப் பார்வை யாலேயே என்னைக் கேட்டார்.
படக்கென நானும் கைகளைக் கட்டிக்கொண்டேன். வாயி லிருந்து வார்த்தைகள் ஏதும்
வராததால், 'அவனு டைய நண்பன்’ என்று கட்டிக்கொண்டிருந்த கைகளினாலேயே
சொன்னேன். அதற்குப் பின்பு, அவர் எதுவும் பேசவில்லை. பிரேயருக்கு சரியாக
ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது எங் களைப் பார்த்து, 'இப்போ போய்ட்டு
நாளைக்கு வந்துருங்க...’ என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டார் டாக்டர்.
நாங்கள் வெளியில் வந்த சிறிது நேரத்தில் அவரும் வெளியில் வந்தார்.
பின்னாலேயே வேலைக்காரப் பெண்ணும் வந்து, வாசல் கதவை இழுத்துப் பூட்டினார்.
டாக்டர், பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு, தன் பையிலிருந்து ஐந்து ரூபாயை
எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். பிறகு, மெக்கானிக் ஷெட்டிலிருந்து
திரும்பியிருந்த ஸ்கூட்டரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். நான்
சீனுவைப் பார்த்தேன்.
''தினமும் இப்படித்தாண்டா!'' என்றான் பரிதாபமாக.
தொடர்ந்து
நானும் சீனுவுடன் சென்று டாக் டர் முன் கைக்கட்டி, கால் கடுக்க
நிற்கத்தொடங் கினேன். ஆனால், ஒரு வாரத்துக்குப் பிறகு அப்படி
நிற்க எனக்குச் சலித்துவிட்டது. நான் ஏன் அவனுடன் தினமும் போய் அப்படி
நிற்க வேண்டும்? என்று நான் யோசித்தது, சீனுவுக்குத் தெரிந்துவிட்டது.
என்னிடம் அந்த திகில்செய்தி யைச் சொன்னான்... 'டாக்டர்கள் கூப்பிட்டுநாம்
போகவில்லை என்றால், என்றாவது ஒருநாள் காய்ச்சல் என்று அவர்களிடம்
செல்லும்போது, நமக்கு விஷ ஊசி போட்டுவிடுவார்களாம்!’
எனக்கு
அதைக் கேட்டவுடன் வியர்த்து விறு விறுத்துவிட்டது. மறுநாள், சீனு
வருவதற்குக்கூட காத்திருக்காமல், முதல் ஆளாகப் போய் டாக் டரின் முன்னால்
நிற்க ஆரம்பித்தேன். கடமைக் காக இல்லாமல் ஆத்மார்த்தமாக டாக்டர் முன்
கைக்கட்டி நிற்கத் தொடங்கினேன். அதன் பிறகுதான் அந்த வீட்டைப் பற்றிய
நுணுக்கமான பல விஷயங்கள் எனக்குப் புரிபட்டது. அந்த வீட்டின் நேர்த்தியும்
டாக்டரின் நேரம் தவறா மையும் இன்னமும் எனக்கு நினைவில் இருக் கிறது.
மிகச்
சரியாக காலை 6 மணிக்கு அந்த வீட் டின் கதவு திறக்கப்படும். வேலைக்காரப்
பெண் உள்ளே நுழைந்த பின் மூடப்படும் கதவை, சரி யாக 8 மணியளவில் நானோ அல்லது
சீனுவோ தான் போய்த் திறப்போம். அப்போது, தன்னு டைய டேபிளில் அமர்ந்து
எதையோ எழுதத் தொடங்கியிருப்பார் டாக்டர். வேலைக்காரப் பெண் சமைத்து முடித்த
பின்பு, கையில் மதிய உணவை எடுத்துக்கொண்டு புறப்படுவார் டாக்டர். அப்போது
சரியாக நேரம் காலை 8.55 மணியாக இருக்கும். அந்த வீட்டில், ஒரு பொருள் இடம்
மாறியிருக்காது. ஓர் இடத்தில் கூட தூசியோ, அழுக்கோ தென்படாது. செருப்பு
முதல் குளியலறை சொம்பு வரை வைத்த இடத் தில் வைத்தபடி இருக்கும். விடுமுறை
நாட்களில் வீட்டையே தலைகீழாக மாற்றிவிடும் வல்லமை கொண்ட என்னை, இந்த
ஒழுங்கு மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.
ஒருகட்டத்துக்குப்
பிறகு, சீனு பொறுமை இழக்க ஆரம்பித்தான். ஒருநாள் வெளியே வரும் போது
டாக்டரின் செருப்பைக் கூடவேகொண்டு வந்துவிட்டான். மறுநாள் காலையில், அதே
இடத்தில் அதே போன்ற ஒரு ஜோடி புது செருப்பு இருந்தது. அடுத்த நாள், அவருடைய
மேஜையில் இருக்கும் சின்னத் தலையாட்டி பொம்மையை சீனு
எடுத்துவந்துவிட்டான். மறுநாள், அதே இடத்தில் வேறு ஒரு தலையாட்டி பொம்மை
இருந்தது. சீப்பு, பேனா என்று அவன் எதைக் கொண்டுவந்தாலும், அவை மறுநாள் அதே
இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இத்தனைக்கும் எங்கள் மீது சந்தேகப்பட்டு
அவர் ஒரு கேள்வி கேட்டது கிடையாது.
திடீரென்று
ஒருநாள், சீனுவின் சைக்கிளை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார் டாக்டர்.
அன்று முதல் அவன் டாக்டர் வீட்டுப் பக்கம் வருவது இல்லை. ஆனால், நான்தான்
பயந்து கொண்டு அவர் வீட்டுக்குத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன்.
மூன்றாவது நாள் என்னைப் பார்த்து, 'இனிமே, நீயும் வர வேண்டாம்’ என் றார்.
ஆனால், ஏனோ எனக்கு அங்கு சென்று நிற்பது பிடித்திருந்தது. தொடர்ந்து
சென்று கொண்டிருந்தேன். இப்போதெல்லாம், அவர் வீட்டு மேஜையில் எனக்காக
ஸ்வீட், மிக்ஸர், சேவு வகைகள் தயாராக இருந்தன. நிற்பதற்குப் பதில் ஒரு
முக்காலியில் உட்கார்ந்துகொள்ளவும் ஆரம்பித்தேன். அவ்வப்போது எழுந்து
வீட்டுக் குள் சென்று உலாத்தவும் தைரியம் பெற்றிருந் தேன். ஆனால்,
டாக்டரிடம் எந்த மாற்றமும் இல்லை. தினமும் சரியான நேரத்துக்கு என் னைப்
போகச் சொல்வதைத் தவிர, வேறு எந்த வார்த்தையும் அவர் என்னிடம் பேசியதே
இல்லை.
சீனு,
அந்தச் சம்பவத்துக்குப் பின், திருவூடல் தெருப் பக்கமே எட்டிப்பார்ப்பது
இல்லை. அந்தத் தெருவுக்குப் பதிலாக கோபுரத் தெருவில் சென்று, பெரியத் தெரு
வழியாக பள்ளிக்குச் சென்றுவிடுவான்.
ஒரு
சனிக்கிழமை மாலையில் நாங்கள் இருவ ரும் டியூஷன் செல்லும்போது, பெரியத்
தெரு மேட்டுத் திருப்பத்தில் அந்தப் பெரிய கால் வாயின் ஓரத்தில் டாக்டரின்
ஸ்கூட்டர் விழுந்து கிடப்பதைப் பார்த்தோம். இருட்டிக்கொண் டிருந்த
வேளையானதால், வேறு யாரும் அதைக் கவனிக்கவில்லை. அப்போதெல்லாம், பெரியத்
தெரு கால்வாயில் காரே விழுந்துகிடந்தாலும் வெளியே தெரியாது. அத்தனை பெரிய
அகல மான கால்வாய் அது. ஓடிச் சென்று பார்த்தால் டாக்டர் கால்வாயினுள்
விழுந்துகிடந்தார். சீனு பெரிதாகச் சத்தம் போட்ட பின்பு, அருகில்
இருந்தவர்கள் ஓடிவந்து கால்வாய்க்குள் குதித்து, டாக்டரை வெளியே
தூக்கினார்கள். அவர் போட்டிருந்த வெள்ளை கலர் பேன்ட், சட்டை முழுக்க வாந்தி
எடுத்திருந்தார். உடம்பில் ஆங் காங்கே ரத்தக் கீறல் வேறு. சுயநினைவு இல்லா
மல் இருந்த அவரை, 'இன்னார்’ என்று நானும் சீனுவும்தான் அடையாளம்
காட்டினோம். உடனே அவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி அவருடைய வீட்டுக்குக்
கொண்டுசென்றார்கள்.
ஞாயிறு
விடுமுறைக்குப் பின், திங்கள்கிழமை நான் டாக்டர் வீட்டுக்குச் சென்றபோது,
வீடு வெளிப்புறம் பூட்டியிருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் போய்ப்
பார்த்தேன். அதன் பின்பு எப்போதுமே அந்த வீடு திறந்திருக்கவே இல்லை.
பின்னாட்களில்
யாரோ ஒருவர் டாக்டரின் வீட்டை விலைக்கு வாங்கி, இடித்துத் தள்ளிவிட்டு
புது வீடு கட்டியிருந்தார். எப்போது அந்தத் தெருவில் சென்றாலும்,
தன்னிச்சையாக அந்த வீடு இருந்த இடத்தைப் பார்க்க நான் தவறுவதே இல்லை.
அதற்குப் பின்பு, வேறெங்கும் அந்த டாக்டரை நாங்கள் பார்க்கவே இல்லை. நானும்
சீனுவும் மொட்டை மாடியில் கூடும்போதெல்லாம் அவரைப் பற்றிதான்
பேசிக்கொண்டிருப்போம். 'ஏழாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களை மிரட்டி,
தினமும் தன் முன்னால் ஏன் அவர் நிற்கச் சொல்ல வேண்டும்?’
'ஒருநாள் கூட, சீனுவின் வீட்டுக்கு வந்து ஏன் நடந்ததைச் சொல்லவில்லை?’
'சீனுவிடமிருந்து பணம் எதுவும் வாங்காமல், சைக்கிளை ஏன் திருப்பித் தந்துவிட்டார்?’
'ஏன் ஒருமுறைகூட எங்களிடம் வேறு எதுவுமே பேசவில்லை?’
'அவர் மேஜை மீதிருந்த பொருட்களை சீனுவோ, நானோதான் திருடுகிறோம் என்று தெரிந்தும்கூட, ஏன் எங்களைக் கண்டிக்கவே இல்லை?’
-
இப்படி விடை தெரியாத பல கேள்விகள் எங்களிடம் மிச்சம் இருந்தன. 'ஒருவேளை,
நாங்கள் அங்கு போய் நிற்பதைத் தவிர்த்திருந்தால் உண்மையாகவே அவர் விஷ ஊசி
போட்டு எங்களைச் சாகடித்திருப்பாரோ’ என்ற சந்தேகத்தை மட்டும் சீனுவும்
நானும் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளவே இல்லை.
சில
நாட்கள் கழித்து சீனு, டாக்டர் வீட்டிலிருந்து தான் எடுத்துவந்த பொருள்களை
எல்லாம் ஒரு பையில் போட்டு எடுத்துவந்தான். அந்த பொருட்களோடுதான் இந்த
ஆங்கில அகராதியும் இருந்தது. அதிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்து என்னிடம்
கொடுத்தான். ஏற்கெனவே பிரித்துப் படிக்கப்பட்டிருந்த கடிதம் அது.
அந்தக் கடிதத்தை, நான் படிக்கத் தொடங்கினேன்.
'மதிப்புக்கும் பெரும் மரியாதைக்கும் உரிய
மருமகப் பிள்ளைக்கு,
உங்கள்
மாமனார் அநேக ஆசீர்வாதங்களுடன் எழுதிக்கொள்வது என்னவென்றால், இங்கு மகள்
ஜானகி, பேரப் பிள்ளை சிவகுமாரன் உள்பட எல்லோரும் சௌக்கியம். அதுபோல்
தங்களின் சௌக்கியத்தையும் பெரிதும் வேண்டுகிறேன். இந்த நேரத்துக்கெல்லாம்,
புதிய இடத்தில் தங்களுக்கு வேலை நன்றாகப் பழகியிருக்கும் என்று
நம்புகிறேன். தாங்கள் வைத்தியம் பார்க்கும் நோயாளிகளின் நலம் வேண்டுவதே
எந்த நேரமும் என்னுடைய பிரார்த்தனையாக இருக்கிறது. பேரப் பிள்ளையைக்கூட
இங்கேயே பக்கத்திலிருக்கும் ஸ்கூலில், ஏழாம் வகுப்பு சேர்த்துவிட்டோம்.
அந்த ஸ்கூல் ஹெட் மாஸ்டர்
என்னுடைய சிநேகிதர் என்பதால், பழைய ஸ்கூல் சான் றிதழ்கூட இல்லாமல் சேர்த்துக்கொண்டார்.
நிற்க!
ஜானகி,
இன்னமும் அப்படியேதான் இருக்கிறாள். சென்ற மாதம் நீங்கள் எழுதி அனுப்பிய
கடிதத்தைப் படிக்கக்கூட பிடிவாதமாக மறுத்துவிட்டாள். உங்கள் மாமி யார்,
அதாவது என் மனைவி, கோயிலுக்குப் போனபோது கடிதத்தின் சங்கதிகளை ஜானகிக் குச்
சொல்லியிருக்கிறாள். அதையும்கூட அவள் அவ்வளவாகக் காது கொடுத்து
கேட்கவில்லை யாம்! மன்னிக்கவும்.
அவளால்,
இன்னமும் கொதிக்கிற பால் தன் முகத்தில் பட்டுவிட்டதை மறக்க
முடியவில்லை.ராத்திரி தூங்கும்போது தவறாமல் புலம்புகிறாள். 'பால்
நேரத்துக்குக் கொதிக்காதது என் தப்பா? அதற்குப் போய் யாராவது இப்படிக்
கோபப்படு வார்களா?’ என்று புலம்பித் தீர்க்கிறாள். சின்னப் பெண்தானே!
பேரன்
சிவகுமாரன் ரொம்பவும் பிடிவாதக் காரனாக இருக்கிறான். விளையாட்டுப் பொம்
மைகளை எடுத்து விளையாடிய பிறகு, எடுத்த இடத்திலேயே வைக்காதது பெரிய
தப்புதான். கொஞ்ச நாள் போனால், ஒருவேளை அப் படியான நல்ல பழக்கங்களைப்
பழகிடுவானோ என்னவோ? தாங்கள் அவனைத் திருத்த வேண்டி, அடித்ததை எல்லாம்
இன்னமும் மறக் காமல் படுத்தியெடுக்கிறான். உங்களின் போட் டோவைப்
பார்த்தாலே, ஜன்னி கண்டதைப் போல அவனுக்கு உடம்பெல்லாம் வியர்ப்ப தால்,
வீட்டுக் கூடத்தில் மாட்டியிருந்த உங்கள் கல்யாண போட்டோவைக் கழற்றி உள்ளே
வைத்திருக்கிறோம். மன்னிக்கவும்.
நிலைமை
சரியாகிவிடும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் என்னைவிட்டுப் போய்க் கொண்டே
இருக்கிறது. நல்ல ஒழுக்க குணங் களும், கண்டிப்பும், நேர்மையும்கொண்ட உங்களை
என்னுடைய மருமகனாக்கிக்கொடுத் தது என் பிரார்த்தனைக்கு இறைவன் கொடுத்த
கூலி என்று எண்ணி சந்தோஷம் அடைந்திருந் தேன். ஆனால், நான் பெற்ற பெண்ணோ,
அப் படிப்பட்ட நற்குணங்களைப் போற்றத் தெரியாப் பெண்ணாக இருக்கிறாளே! நான்
என்ன செய்யப்போகிறேன்?
எனக்குக்
கல்யாணமாகி பல வரு டங்கள் கழித்துப் பிறந்த ஒரே பெண் என்பதால், மிகுந்த
செல்லம் கொடுத்து அவளை வளர்த்துவிட் டேன். இப்போதுகூட அவளிடம்,
'மாப்பிள்ளையிடம் போய் சேர்’ என்று கடுமையாகச் சொல்ல எனக்கு வாய் வரவில்லை.
அம்பாளே பார்த்து அவளுக்கு நல்ல புத்தி கொடுக்கும் வரை தாங்களும்
பொறுத்திருக்குமாறு உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
அநேக கோடி ஆசீர்வாதங்களுடன்,
எஸ்.வைத்தியநாதன்’
கடிதம்
முடிந்துவிட்டிருந்தது. 'உனக்காவது ஏதாச்சும் புரிந்ததா’ நான் படித்து
முடிக்கக் காத்திருந்தவன் போல, என்னைக் கேட்டான் சீனு. அப்போது அவன்
கேட்டபோது எனக்கும் ஒன்றும் புரிந்திருக்கவில்லை.
ஆனால்,
இப்போது அந்த டாக்டரின் வயது எனக்கு. இன்று எனக்கு அந்தக் கடிதத்தில்
புரிந்துகொள்ள சில செய்திகள் இருந்தன. கடி தம் எழுதப்பட்ட தேதியைப்
பார்த்தேன். நாங் கள் டாக்டரை சென்று பார்த்துக்கொண்டிருந்த காலத்துக்கும்
ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம். தினமும்
எங்களை அவரின் வீட்டுக்கு வரவழைத்துக் கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்ததின் காரணம், வெறும் ஐந்து நாட்களாக மகனைப்
பார்க்காமல் இருப்பதற்கே, பதைப் பதைத்துப் போயிருக்கும் எனக்கு இப்போது
புரிந்தது.
இப்போது
அந்த டாக்டரும் இல்லை... சீனுவும் இல்லை. புத்திர சோகத்தின் மௌன சாட்சியாக
அந்தக் கடிதமும், எனது பால்ய கால நினைவுகளும் மட்டுமே என்னிடம்
இருக்கின்றன.
இப்போது கூடுதலாக, இந்தக் கதையும்!